Sunday, May 31, 2009



Busyயா இருக்கறதுன்னா என்னன்னு தெரியுமா ?
வெட்டியா இல்லாத மாதிரி நடிக்கிறது..


(கே.பி. ஆபீஸில் இப்படித்தான் பேசிக்கொள்வார்களாம்).

ஏஞ்சல்ஸ் & டீமன்ஸ்

இன்று காலை, வெகு நாளாக எதிர்பார்த்திருந்த "Angels & Demons" படம் பார்த்தேன். ஏமாற்றம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான் படம் பார்த்தேன். நான் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. இந்தப் படம் Dan Brown எழுதிய Angels & Demons என்ற புஸ்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். இந்தப் புத்தகத்தைப் படித்திறாத மூன்று நண்பர்களும், இரண்டு தடவை படித்திருந்த நானும் சேர்ந்து பார்த்தபோது.. அவர்களுக்கு கதை புரியவில்லை. எனக்கு திருப்தியளிக்கவில்லை.

பொதுவாகவே, ஏற்கனவே வெளிவந்து வெற்றியடைந்த புத்தகத்தை வைத்துப் படம் செய்வது என்பது கொஞ்சம் கஷ்டம். அதிலும் அந்தப் புத்தகத்தின் ரசிகர்களை, படத்தின் ரசிகர்களாக அடைவது இன்னும் கஷ்டம். காரணம், ஒரு வாசகன் ஒரு கதையை வாசிக்கும் போதே அதை மனதில் ஒரு படமாக இயக்கிவிடுகிறான். அவனுக்குப் பிடித்தமான நடிகர்களை வைத்து நடிக்கச்செய்கிறான். சொந்தக் கற்பனையில் அந்தப் படத்தைப் பார்க்கிறான். அந்த கற்பனையின் வீரியத்தை எந்த இயக்குனராலும் மிஞ்ச முடியாது.

அந்த வகையில் நானறிந்த வரையில் புத்தகமாகவும் வந்து வெற்றியடைந்து படமாகவும் சோபித்த சில படங்களில் முக்கியமானது காட் ஃபாதர். அதன் வெற்றிக்குப் பின்னால் எத்தனையோ பேர் இருந்தாலும் அந்தப் புத்தகத்தை எழுதிய மரியா புசோவே திரைக்கதையும் எழுதி வெற்றிக்கு வழி வகுத்தார். (Harry Potter கூட புத்தகங்கள் படங்களைவிட விரும்பப்படுவதும் இதனால்தான்).

Angels & Demonsக்கு வருவோம். படம் நன்றாகவே இருக்கிறது. ஆனால், பல இடங்களில் புத்தகத்தைவிட்டு அதிகமாக வேறுபட்டு இருக்கிறது. படத்தின் நீளத்தைக் குறைக்கவோ என்னவோ, CERNல் அதிகம் கதையளக்காமல், யாருடைய flashbackஐயும் நீட்டி முழக்கி சொல்லாமல் துரித வேகத்தில் படத்தை நகர்த்தியிருக்கின்றனர்.

நாவலை வேகமாக அங்கங்கே பக்கங்களை வேகமாகப் புரட்டி படித்து முடிப்பது போல இருந்தது. ஆனால், மூலக்கதையில் எங்கும் கோட்டைவிடாமல் சுறுசுறுப்பாக ஓட்டிச்சென்றது நிம்மதியாக இருந்தது. ஆனால் வழி நெடுக ராபெர்ட் லாங்க்டன் கதாபாத்திரம் (Tom Hanks) சொல்லிக்கொண்டே வரும் factsகளை கவனிக்கமுடிவதில்லை. கதை படிக்காதவர்கள் "Illuminati" குறித்த டையலாகுகளை புரிந்துகொள்ள முடியவில்லை. படம் அடுத்தவருக்கு எப்படிப் புரிகிறது என்பது போன்ற வெட்டிக் கவலைகள் ஏதும் எனக்கு இல்லை. இருந்தாலும் புத்தகத்தை அப்படியே நம் கண்முன் காட்டப்போகிறார்கள் - அந்த அனுபவத்தை ரசிக்கப்போகிறோம் என்று (தவறுதலாக) நினைத்த எனக்கு சிறிது ஏமாற்றம். அவ்வளவே. புத்தகத்தில், விட்டோரா என்கிற ஹீரோயின் கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் ஆழமானது.. அதற்கு அர்தமில்லாமல் செய்தது பெருங்குற்றம். இதை மாதிரி சில பல deviation from the book.. ஜீரணிக்க முடியாததாக இருந்தது.

விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. வேட்டிக்கனை இன்னும் அழகாகவும் டீடெயிலாகவும் காண்பித்திருக்கலாம். டி.வி. பெட்டியில் தெரியும் க்ளாரிட்டிதான் வேட்டிக்கனைக் காண்பிக்கும்போது தெரிகிறது. மத்தபடி எல்லாம் சாதாரன இங்கிலீஷ் படத்திற்குண்டான டெக்னாலஜிக்கள்தான்.

எப்படியாக இருந்தாலும், இந்த இரண்டரை மணி நேரத்தில் இப்படித்தான் எடுக்க முடியும் என்று தோன்றுகிறது. ஆனால், குழப்பமான "The Prestige" புஸ்தகத்தை திரைக்கதையாக எழுதி சிறந்த படமாக ஒருவரால் இயக்க முடியும் என்றால், "Angels & Demons" could have been a lot better than what I saw today.

Friday, May 29, 2009

துணை..


- Pic Ctsy - The Hindu

பொன்னியின் செல்வன் புத்தகத்திலிருந்து சில வாக்கியங்கள்:

"சுந்தர சோழர் நோய்வாய்ப்பட்டு நடமாடவும் சக்தியில்லாமல் போன காலத்திலிருந்து, அரசுரிமை சம்பந்தமான குழப்பங்கள் சோழ நாட்டில் ஏற்படக்கூடுமோ என்று மக்கள் கவலைப்பட்டு வந்தார்கள். பழுவேட்டரையர், சம்புவரையர் முதலிய குறுநில மன்னர்களும், பெருந்தரத்து அதிகாரிகளும் சுந்தர சோழரின் புதல்வர்களுக்கு விரோதமாகக் கண்டராதித்தருடைய மகனுக்குப் பட்டம் கட்டச் சதி செய்கிறார்கள் என்னும் வதந்தியும் பரவியிருந்தது.".............

"அரச குடும்பத்தினரும், குறுநில மன்னர்களும் பலதார மணம் செய்துகொள்வது அந்நாளில் சாதாரணமாக இருந்தபடியால் யாரும் அதைப் பற்றி வியப்பு அடையவில்லை."..............

"கடைசியாக மகுடாபிஷேகத்துக்குக் குறிப்பிட்ட தினத்தன்று சூரியன் உதயமாயிற்று. உதிக்கும்போதே பனித்திரளைப் போக்கிக் கொண்டு பொற் கிரணங்களைப் பரப்பிக் கொண்டு தேஜோமயமாக உதித்த சூரியனைப் பார்த்த மாந்தர் அனைவரும், "இன்றைக்குப் பொன்னியின் செல்வருக்கு மகுடாபிஷேகம் அல்லவா! ஆகையால் சூரியனும் பொன்னொளி வீசித் திகழ்கிறான்!" என்று கூறி மகிழ்ந்தார்கள்."............

"இதைக் கவனித்தார் பொன்னியின் செல்வர்...."ஐயா! புலவரே! இத்தனை நேரமும் தாங்கள் கூறி வந்த புகழெல்லாம் என் முன்னோரைப் பற்றியவை அல்லவோ? இந்தப் புராதனப் பெருமை வாய்ந்த சிங்காதனத்தில் அமர்ந்து மணி மகுடம் சூட்டி கொள்வதற்குத் தகுதியுள்ளவனாக நான் என்ன காரியம் செய்திருக்கிறேன்? அதைப் பற்றிக் கூறுவதற்குக் கலைமகள் இங்கே இப்போது பிரசன்னமாவது சாத்தியமில்லையாதலால் தங்களால் இயன்ற வரையில் சற்று எடுத்து இயம்பலாமே?" என்றார்.............................

புலவர் திகைத்து நின்றதைப் பார்த்த பொன்னியின் செல்வர், "ஐயா! தாங்கள் திகைத்து நிற்பது இயல்பே, தங்கள் பேரில் குற்றம் இல்லை. அவ்வாறு என்னுடைய புகழைப் பாட்டில் அமைத்துப் பாடும்படியாக நான் இன்னமும் ஒரு காரியமும் செய்யவில்லை. இன்றுதான் தொடங்கப் போகிறேன்!" என்றார்.

வஸந்தம் வந்தது..

முக்கிய குறிப்பு.. மேல் குறிப்பிட்ட படத்துக்கும் "பொன்னியின் செல்வன்" குறிப்புக்கும் சம்பந்தமில்லை. பொன்னியின் செல்வன் மன்னராட்சி காலத்தைப் பற்றியது.. இப்பொழுதுதான் ஜனநாயக முறை நிலவுகிறதே..

வலி புரியும்..

அதிகாலையில், அல்லது நள்ளிரவில் மணிக்கணக்கில் க்யூவில் நின்று அட்மிஷன் பாரத்திற்காக நின்ற ஒவ்வொரு தகப்பனின் வலியும் புரிந்திருக்கும் அவருக்கு..

யாருக்கு ?

Weekend movie.. no marks for guessing what movie !!

Thursday, May 28, 2009

சித்தப்பு..

மு.கு. : "சித்தி" படத்தில் பத்மினி உருகிப்பாடும் கண்ணதாசனின் வரிகள் பெண்களின் வாழ்க்கைப்பதிவைக் காட்டி தாலாட்ட வைத்தது. ஆண்களுக்கும் இப்போது கிட்டத்தட்ட அதே நிலைமைதான். ஆகவே என் கற்பனைப் படமான "சித்தப்பு.." படத்தில் வரும் இந்தப் பாடல், எங்கள் ஆண்கள் சமூகத்திற்கு உண்டானது.

ஸ்டார்ட் மீஸிக்..

ஆணாகப் பிறப்பவற்கு கண்ணுறக்கம் இரண்டு முறை..
பிறப்பில் ஒரு தூக்கம், இறப்பி்ல் ஒரு தூக்கம்..
இப்போது விட்டுவிட்டால் எப்போதும் தூக்கம் இல்லை
என்னரிய சிங்கக்குட்டியே, கண்ணுறங்கு கண்ணுறங்கு

ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ

காலமிது காலமிது, கண்ணுறங்கு மகனே..
காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகனே..
தூக்கமில்லை மகனே.

நாலு வயதான பின்னே, பள்ளி விளையாடல்..
ஆசானுக்கு பயந்துகொண்டே முட்டிக்கால் போடல்
எண்ணிரண்டு வயதுவந்தால், கண்ணுறக்கம் இல்லையடா
ஏகப்பட்ட சப்ஜெக்டுகள் உயிரை எடுக்குமடா
தீராத தொல்லையடா

மாறும்.. பிள்ளை மனம் மாறும்.. குழப்பங்கள் நேரும்
கன்னிமுகம் கண்டுவிட்டால், கண்ணுறக்கம் ஏதடா
கவிஞன் தானென்று கவிஎழுதச் சொல்லுமடா
தான் நினைத்த காதலியை சேர வரும்போது
காதலியே அதை மறுத்தால், கண்ணுறக்கம் ஏதடா
இரவெல்லாம் கண்ணீர் விட்டு தாடி வளர்க்கனும்டா

ஆபிஸுக்கு போகணும்டா, நாயா உழைக்கணும்டா
லேட் ஹவர்ஸ் போட்ட பின்னே, கண்ணுறக்கம் ஏதடா
மாலையிட்ட மனைவி வந்து மனையில் புகும்போது
பழைய காதலியை இரவோடு மறக்கனுமடா..

ஐயிரண்டு திங்களிலும் (மனைவி) பிள்ளைபெறும்போது
துணையாக நீ இருந்து ஒத்தாசைகள் புரியனும்டா
அழுகிற குழந்தைக்கு டையப்பர் மாத்தனும்டா
அதன் அழகுப் புன்னகையின் சுகத்தை உணரனும்டா

ஊடல்கள், கூடல்களில் குடும்பம் உருளுமடா
சந்தோஷம் ஏமாற்றம் இரண்டும் இருக்குமடா
இரண்டுக்கும் ஒற்றுமையாய் கண்ணுறக்கம் இல்லையடா
கண்ணுறக்கம் இல்லையடா..

கை நடுங்கி கண் சுருங்கி கால்களும் தளரும்
காணாத தூக்கமெல்லாம் பின்பு வந்து சேரும்
வாழ்ந்த வாழ்க்கையை ஓட்டிப் பார்த்தால்,
கண்கள் தானாய் மூடும்.
கண்கள் தானாய் மூடும்..

Sunday, May 24, 2009

இனி...

தேர்தல் முடிந்துவிட்டது. ஐ.பி.எல் (IPL)லும் முடிந்துவிட்டது. இலங்கையிலும் சண்டை ஓய்ந்துள்ளது. பாகிஸ்தான் SWAT குறித்து ஏதோ நடவெடிக்கை எடுக்கும் போல் உள்ளது.. ஆக, அனைத்து விதமான முக்கியமான செய்திகளும், இன்றைக்கு எழும்போது இல்லை.

இனிமேல் நாமாக எழுதினால்தான் உண்டு.

Tuesday, May 12, 2009

ஓட்டுப் போட்டு சரைத்தேன்...

காலையிலேயே ஓட்டு போட்டுவிட்டேன். அங்கே கைவிரலில் மை தடவ உட்கார்ந்திருந்தவர், சிரத்தையாக ஒவ்வொருவர் நகத்தையும் க்ளீன் செய்துவிட்டு, அதற்குப் பிறகு மை தடவி விட்டார். என்னுடைய முறை வந்த போது, நமுட்டு கடித்துக்கொண்டு நக பாலிஷ் இடுவதுபோல இட்டார். விரல் நுணி முழுவதும் கரு நீலத்துக்கு மாறியது. ஜாதகம் எழுதும்போது ஒரு கணக்கு போடுவார்கள்... அதாவது கர்ப காலத்தில் நாம் கழித்த காலம் என்றும் எஞ்சி இருக்கும் தசா புக்தி என்றும் கணக்கு போடுவார்கள். அப்படி அந்த கர்ப காலத்தில் கழித்த காலம் அத்தனைக்கும் சேர்த்து மை இட்டது மாதிரி இருந்தது, என் இடது கை ஆட்காட்டி விரல்.

பின்னர் மறைவாக வைக்கப்பட்டிருந்த வோட்டு இயந்திரத்தின் முன் நின்று, பட்டனை அமுக்குவதற்கு முன் சாமி கும்பிடவேண்டுமா என்று யோசித்து, பின் ரஜினிகாந்த் சொன்ன "ஆண்டவனே வந்தாலும் காப்பாத்த முடியாது !" என்ற டையலாக் ஞாபகம் வந்து அனிச்சையாக அந்த மூன்றாவது பொத்தானை அமுக்கிவிட்டேன்.

பல கரைவேட்டிகளின் எதிர்காலத்தைத் தீர்மானம் செய்யும் ஒரு காரியத்தில், என் எதிர்காலமும் அதில் அடங்கியிருக்கும் காரணத்தால் கலந்து கொண்டேன். வீட்டிற்குச் சென்று பார்த்தால், கமலஹாஸனுக்கு வோட்டு இல்லை என்று செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்தது.

அதைப் பார்த்தவுடன் எந்தவிதமான சமுதாயக் கோபமும் ஏற்படாமல், அவரை மாதிரி தாடி வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்கேற்றார் போல் தாடியும் கொஞ்சமாக வளர்ந்திருந்ததால், ஒரு அரை மணி நேரப் ப்ரயாசையில் "உன்னைப்போல் ஒருவன்" ஸ்டைல் முகத்தில் தென்பட்டது. தைரியம் உள்ளவர்கள் இங்கே க்ளிக் செய்யவும்.

அதன் பின் சிகையை இன்னும் கொஞ்சம் சீரமைத்தால் தேவலை என்று தோன்றி அந்த வேளையில் திறந்திருக்கும் ஒரு சலூனுக்குள் நுழைந்தேன். முடிவெட்ட ஆரம்பித்தவர் பேச ஆரம்பித்தார். "என்ன சார் ! பலம்மா வோட்டு போட்டுட்டீங்க போல.. !" என்றார்.. வேளியே நீட்டிக்கொண்டிருந்த அந்தக் கருநீல விரலை உள்ளே இழுத்துக்கொண்டு, ஆமோதிப்பதுபோல சிரித்தேன்.

"எனக்கு ஓட்டு திண்ணனூர்ல சார்.. காலேல கடைய திறந்துட்டு ஒரு எட்டு கஸ்டமர்ங்கள பார்த்துட்டு, பதினோறு மணிக்கு கடைய சாத்திட்டு அங்கே போய்ட்டு ஓட்டு போட்டுட்டு... திரும்ப வந்து இப்பொதான் கடைய திறக்கறேன்... கரெக்டா நீங்க வந்தீங்க.."

"ஓ.." என்று சொல்லிவிட்டு.. "கொஞ்சம் மீடியமா கட் பண்ணிடுங்க" என்றேன்.

ஒருவேளை என் கம்பெனியில் இன்று லீவு விடவில்லை என்றால் நான் வோட்டு போட்டிருப்பேனா என்பது சந்தேகமே..

சலூன் கடைக்காரர் விடாமல் தான் வோட்டுப்போட்ட அனுபவங்களை அளவளாவிக் கொண்டிருந்தார். தான் எப்போதுமே வெற்றி பெறும் கட்சிக்குத்தான் வோட்டுப் போடுவார் என்றும், இந்த முறையும் அது நடக்கும் என்றும் சொன்னார்.

"அவுரு வந்தாருன்னா, நல்லது செய்வாருங்க.." என்று நம்பிக்கையோடு சொன்னார். அவர் வோட்டின் பிரதிபலன் நாளையிலிருந்தே அவருக்குக் கிடைக்கப்போவது என்ற எண்ணம் அவருக்கு இருப்பதாகத் தோன்றியது. அவரைப் போல எனக்கும் நம்ப வேண்டும் என்று ஆசை.

பைசா கொடுத்துவிட்டு வெளியே வந்தால் அந்த அமைச்சர் தலைக்கு மேல் கைகளால் கும்பிட்டபடி நின்றிருந்த போஸ்டர் தென்பட்டது. சலூனுக்கு உள்ளே பார்த்து சிரித்தேன்.. "போய்ட்டு வாங்க சார் !" என்றார்.

மாற்றம் மட்டுமே மாற்றமில்லாதது என்பது இல்லை. ஏமாற்றமும் மாற்றமில்லாதது என்று தோன்றியது.

Saturday, May 02, 2009

Everybody loves ஸ்ரீகுமார் !

Heavily inspired by "Everybody Loves Raymond"

"ஐ ஹேட் யூ !!" என்ற குரல் கேட்கிறது, இடதுபுறத்திலிருந்து.

வெளிச்சம். ஒரு மத்திய தர ஃப்ளாட்டின் ஒரு ஹால் தெரிகிறது. நடுவில் மூன்று பேர் அமரக்கூடிய ஒரு சோபா. அதன் மீது இன்றைய நியூஸ் பேப்பர்.. அதன் மீது டி.வி. ரிமோட் தலைகுப்புற வைக்கப்பட்டிருக்கிறது. அதன் முன்னே ஒரு டீபா.. மேலே களேபரமாக புஸ்தகங்களும், நேற்றிரவு கழட்டிப்போட்ட துணிமணிகளும் ஒரு டெலிபோனும் தெரிகின்றன. ஆஃப் வொயிட் நிறத்தில் தெரியும் சுவர்களில் ஒரு பெரிய சுவர்க் கடிகாரம் ஒன்பதே கால் என மணி காட்டுகிறது. வலது புறத்தில் வாசற்கதவு தென்படுகிறது. இடதுபுறத்தில் சமயற்கட்டின் வாசல் தெரிகிறது.

"ஐ ஜஸ்ட் ஹேட் யூ,... !" என்று மறுபடியும் குரல் கேட்கின்றது. இடப்புற வாயில் வழியாக காதை மூடிக்கொண்டே ஸ்ரீ என்கிற ஸ்ரீகுமார் வெளிவருகிறான். காலர் இல்லாத சாம்பல் நிற டீ ஷர்டும் கறுப்பு நிற ஷார்ட்ஸும் அணிந்திருக்கிறான். ஹாலுக்கு வந்து கசங்கிய நியுஸ் பேப்பரை எடுத்து அவசரமாக படிக்கப் பிரிக்கிறான். ரிமோட்டை எடுத்து நம்மை நோக்கி அழுத்துகிறான். டி.வியில் கிரிக்கெட் இரைச்சல் கேட்கின்றது.

இடது சமயல் வாயில் வழியாக வஸந்தி சிகப்பு நிற சுடிதார், துப்பட்டா இன்றி வேகமாக வெளிவருகிறாள். எரிச்சலாக நம்மை நோக்கிப் பார்க்கிறாள். பின் பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீயைப் பார்க்கிறாள். கோபமாக கைகளை இடுப்பில் வைத்துக்கொள்கிறாள். சோபாவிலிருந்து ரிமோட்டை விருட்டென எடுத்து நம்மை நோக்கிக் காட்டுகிறாள். இரைச்சல் சப்தம் நிற்கிறது. ஸ்ரீ கவனிக்காமல் பேப்பரை புரட்டுகிறான். ரிமோட்டை சோபாவில் எறிந்துவிட்டு, ஸ்ரீயின் கையில் இருந்த பேப்பரைப் பிடுங்கி நடுவாகில் சுக்குநூறாகக் கிழிக்கிறாள்.

ஸ்ரீ என்கிற ஸ்ரீகுமார் இமைகொட்டாமல் அவளையே பயத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறான். எரிக்கும் பார்வையில் பாவனையாக மூச்சை இழுத்து வாங்கிக்கொண்டிருந்தாள் வஸந்தி.

கைகள் இரண்டையும் வானத்தை நோக்கி விரித்து "ஆதி மூலமே..." என்று கத்துகிறான் ஸ்ரீ.

"கரெக்ட்.. உன்னை இனிமே அந்த கடவுள்தான் காப்பாத்தனும். " என்று சொல்லி சோபாவில் இருந்த ஒரு குஷனை எடுத்து அவன் மீது எறிந்தாள், வஸந்தி.. தடுத்தபடி சாய்கிறான், ஸ்ரீ என்கிற ஸ்ரீகுமார்.

கட்...நிற்க.

பல மெகாசீரியல்கள் பார்த்துப் பழகிய உங்களுக்கு, கொஞ்சம் சிக்கனமாக முன்கதைச் சுருக்கம் சொல்ல விழைகிறேன். ஸ்ரீகுமார் பற்றியும் வஸந்தி பற்றியும் ஆயாசமாக கதையின் போக்கில் தெரிந்துகொள்ளலாம். ஆனால், முக்கியமாக நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது அவர்கள் இருக்கும் இந்த வீட்டைப் பற்றி. அதற்காக கொஞ்சம் கதையின் போக்கிலிருந்து வெளியேவந்து எந்தக் கதையின் ஆரம்பத்திலும் தோன்றும் இயல்பான அறியாமையை அகற்றிவிட்டு ஸ்ரீகுமார்-வஸந்தியின் சண்டை முடியும் முன் சேர்ந்துகொள்வோம்.

ஸ்ரீ என்கிற ஸ்ரீகுமார் வஸந்தியை லோல்பட்டு காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டான். இருவர் வீடும் எதிரெதிர் துருவங்கள். அதாவது ஒரே தெருவில் எதிரெதிர் வீடு. வடக்கு பார்த்து நின்ற வீடு ஸ்ரீயின் அப்பா வேதமூர்த்தியினுடையது. தெற்கு பார்த்து நின்ற வீடு வஸந்தியின் அப்பா தாமஸ் ஆல்வரன்ஸினுடையது. தந்தைகள் இருவரும் நெடு நாள் நண்பர்களாக இருந்தார்கள் (இறந்தகாலம்).

ஸ்ரீயின் வீட்டில் பாதி மனதாக ஒத்துக்கொண்டார்கள். வஸந்தியின் வீட்டில் முழுமனதாக ஒத்துக்கொண்டு திருமணத்திற்குப் பின் பாதி மனதாக மாறிவிட்டார்கள். இரண்டிற்கும் காரணம் அம்மாக்கள். மிசஸ் கோமதி வேதமூர்த்தியும் மிசஸ் டெய்சி தாமஸும் சில சமயம் இழைவார்கள்.. சில சமயம் குழைவார்கள்.. பாக்கி சமயங்களில் கிழி கிழி என்று கிழித்துவிடுவார்கள். யதார்த்தமான பல மிடில் கிளாஸ் அண்டை அயலார் நட்பு மாதிரிதான் இவர்களுடையதும்.

கல்யாணம் இந்து முறைப்படி நடந்தது. வஸந்தி எதிர்வீட்டுக்கு புகுந்தாள். வஸந்தியை மருமகள் என்ற முறையில் எதிர்பார்க்காததாலும், தன் உத்தம புத்திரனாகிய ஸ்ரீயை மயக்கிய மினுக்கி என்று நம்புவதாலும், இன்னும் முக்கியமாக அந்த டெய்சியின் மகளாக இருந்ததாலும் வஸந்தியை மனதிற்குள் கருவினாள். வஸந்தி இந்த விஷயத்தை வேறு விதமாக அனுகினாள். இன்கம் டேக்ஸைக் காரணம் காட்டி புதிதாக வீடு வாங்கி தனிக்குடித்தனம் போகலாம் என்ற யோசனையை அப்பாவி ஸ்ரீயின் ஞானத்தில் உதயமாகச் செய்தாள்.

ஸ்ரீயும் வஸந்தியும் தனிக்குடித்தனம் போனால்தான் நல்லது என்று ஒன்றுகூடி முடிவு செய்தார்கள். ஆனால், அதில் ஸ்ரீக்கும் வஸந்திக்கும் ஏக வருத்தம்.

காரணம், தனிக்குடித்தனம் போக இருவர் வீட்டிலும் முடிவு செய்த இடம் அதே தெருவில் வடமேற்காக வாசல் பார்த்திருக்கும் ஒரு ஃப்ளாட்டின் முதல் மாடியின் ஒரு வீட்டை. வேறு பெரிய வழி இல்லாததால், முப்பது இலட்ச ரூபாய்க் கடன் பத்திரத்தோடு க்ரஹப்ரவேசம் செய்தான் ஸ்ரீ என்கிற ஸ்ரீகுமார். வீட்டின் பெயர் "சமந்த பஞ்சகம்" என்று வைத்தார் வேதமூர்த்தி. யாருக்கும் புரியவில்லை.

இத்தனை கதாபாத்திரங்களில் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை, ஸ்ரீ என்கிற ஸ்ரீகுமாரை அனைவரும் சம அளவில் நேசித்தார்கள்.

இந்த முன்னுரை போதும் என்பதாலும், ஒரு நாளில் தோன்றி மறையும் இருபது சண்டைகளில் ஒன்றான மேற்கண்ட சண்டை முடியப்போவதாலும் இந்த உரையை இத்துடன் முடித்துக்கொண்டு மறுபடியும் ஹாலுக்குச் செல்வோம்.

வெளிச்சம்.

contd - next week.

மந்தம்

Slow legal system hampers India's counter-terrorism moves: US

நிச்சயமான உண்மை இது.

2001 செப்டம்பர் பதினொன்று அன்று அமெரிக்க ட்வின் டவர்கள் சாய்க்கப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி அஃப்கானிஸ்தான் மீது குண்டு மழை பொழிந்தது அமெரிக்கா. அந்த முடிவு சரி தவறு என்ற விவாதங்களைத் தாண்டி, அந்த சமயத்தில் அந்த நாடு கோபப்பட்டது நியாயமே.

நமது நாட்டுக்குள் ஒரு இரவில் அனாயாசமாக நுழைந்து, இந்த நாட்டையே மூன்று நாட்கள் பதைபதைக்க வைத்த அந்த மோசமான நவம்பர் இருபத்து ஆறாம் நாள் முடிந்து ஏறக்குறைய ஐந்து மாதங்கள் ஓடிவிட்டன.

நமது அதிகபட்ச reaction பாகிஸ்தானுடன் அறிக்கை போர் நடத்துவது. தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்வது. அனுதாபப்பட்டது. உள்துறை அமைச்சகத்தை சீர்படுத்துவது.

பிடிபட்ட "கசாப்" என்கிற தீவிரவாதி கோர்ட்டிடம் வாசனை திரவியங்கள் கேட்கிறான். அமிதாப் பச்சன் டிவிடி கேட்கிறான். காலாற நடைபயில சுதந்திரம் கேட்கிறான். இன்னும் கொஞ்சம் போனால் விலை மகள் கேட்பான். சட்டத்தில் இடம் உண்டா என்று வக்கீல்கள் மண்டையைச் சொறிந்து கொள்ளவைப்பான்.

பொறுக்கி *********** ராஸ்கல்.

அவனை நாம் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வது எதற்காக என்று இன்னும் புரியவில்லை. அவன் ஒரு பாகிஸ்தானி என்று பாகிஸ்தான் வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொண்டாகிவிட்டது. ஒன்று ஒப்படைக்க வேண்டும்.. அல்லது முடியாது என்று சொல்லி இங்கே execute செய்ய வேண்டும்.. எதையும் யோசித்துத் தான் செய்யவேண்டும் என்றால் எத்தனைக் காலம் இழுத்தடிப்பது.

இது மோசமான ஒரு எடுத்துக்காட்டு இல்லையா ? ஒரு தீவிரவாதச் செயல்.. மன்னிக்கவும் பயங்கரவாதச் செயல் செய்த ஒருவன் இன்னும் உயிருடன் இருக்கிறான். அவனுக்கு என்னென்ன சோடசோபன உபசாரங்கள் வேண்டும் என்று நீதிமன்றம் காது கொடுத்துக் கேட்கிறது.

வெட்கம்.


யாவரும் நலம்

Not PC Sriram, Not Madhavan